Wednesday, November 10, 2010

எனக்கு தெரிந்த மொழி

பொதுவாக ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பியல்பு உண்டு. அவையாவன மொழிவளம்,இனிமை,தெளிவு,கருத்து,உச்சரிப்புத்தன்மை,உள்ளர்த்தம் போன்றவையாகும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொழிக்கும் வித்தியாசமான சிறப்பியல்புகளை கொடுக்கிறது.
இங்கு மொழி பற்றி கதைக்கும் போது இன்னுமொரு முக்கிய விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது எழுத்து வடிவம் அல்லது வரி வடிவம் என்பதாகும்;. எழுத்து வடிவம் என்பது உண்மையிலேயே ஒரு மொழி அல்ல. அது உண்மையிலேயே மொழிக்கு வலுச்சேர்க்கும் ஒரு வரைபடத் தோற்றமாகும். மொழி என்பது சத்தம் மற்றும் ஒலியுடன் மட்டுமே தொடர்பு பட்டதாகும். ஆனால் இன்று வரை மொழி நிலைத்து நிற்பதற்கு வரி வடிவம் முக்கிய பங்கு வகிக்கின்றது.
தற்போது வழக்கில் இருக்கும் மொழிகள் மற்றும் வழக்கொழிந்து மறைந்து போன மொழிகள் என்பவை இன்று நேற்று தோற்றம் பெற்றவையல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படிப்படியாக சிறுக சிறுக தோற்றம் பெற்றவையாகும். இந்த ஒவ்வொரு மொழியும் அந்தந்த இடத்து மக்களுடைய கலை,கலாச்சார,பண்பாட்டிற்கு அமையவே தோற்றம் பெற்றவையாகும். அதாவது ஒரு மொழியை வைத்துக்கொண்டு அந்த மொழி பேசும் மக்களின் பொதுவான இனத்திற்குரிய இயல்பு,குணாதிசயங்களை கண்டுபிடிக்கலாம்.
அத்துடன் இன்னொரு முக்கிய விடயம், உலகில் பேச்சு வழக்கில் பல மொழிகள் உள்ளன. ஆனால் துரதிஷ்டவசமாக எல்லா மொழிகளுக்கும் எழுத்து வடிவம் இல்லை. இதுவே பல மொழிகள் அழிந்து போவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. பேச்சு வழக்கில் உள்ள ஒரு மொழியை எழுத்து வடிவத்திற்கு மாற்றுவதென்பது இலேசுப்பட்ட காரியமல்ல. அத்துடன் இனி எங்களால் ஒரு மொழியை உருவாக்கி அதை எழுத்து வடிவத்திற்கு மாற்றுவதென்பது கல்லிலே நார் உரிப்பதற்கு சமனாகும். அதாவது மொழி என்பது செயற்கையாக அல்லாமல் இயற்கையாகவே தோற்றம் பெற்றதாகும். இதுவும் மொழிக்குரிய இன்னொரு சிறப்பியல்பாகும்.
எனவே ஒவ்வொரு மனிதனும் தனது தாய் மொழியை மட்டும் கற்காமல் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை கற்க வேண்டும். அப்பொழுதுதான் ஒவ்வொரு மனிதனின் பிறப்பிலும் உண்மையான ஓர் முழுமைத்தன்மை,ப+ரணத்தன்மை ஏற்படும். ஆனால் அதைவிட முக்கிய விடயம் என்னவென்றால் ஒவ்வொரு மனிதனும் தனது தாய் மொழியை சரியாக கற்று மறக்காமல் வைத்திருப்பது மட்டுமல்லாமல் அதை கடைசிவரை பேச வேண்டும். இன்னொரு முக்கிய விடயம் கல்வி கற்கும் போது அதை தாய் மொழியில் கற்று பேசினால்தான் கற்பனை வளம்,யோசிக்கும் திறன்,ஆராய்ச்சி மனப்பான்மை அதிகரிக்கும். இது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டதாகும். இல்லாவிட்டால் ஒவ்வொருவரினதும் தாய் மொழி அப்படியே இருக்கும். ஆனால் அதை பேசுவதற்கு யாருமே இருக்கமாட்டார்கள். காரணம் மொழியை யாராலும் அழிக்க முடியாது.
சரி இனி விடயத்திற்கு வருவோம்……
1)அ(ப்)பி பாசல(ட்)ட யனவா.
2)எத்த கத்தா கரன்ன.
3)ஒபே நம மொக்கத்த(குமக்த)?
4)மகே நம ………
5)தாத்தா கொய் வெலே எய்த?
6)மம கெதர அட்ட யனவ.
7)லஸ்ஸன,மல்லி,நங்கி,…...

இவையெல்லாம் நான் பாடசாலைக் காலம் முதல் கேள்விப்பட்ட சிங்கள மொழி சொற்கள்,வசனங்கள். என்னவோ தொரியவில்லை, எனது துரதிஷ்டம் என நினைக்கிறேன், அந்த மொழி இதுவரை என் மனசுக்குள்ளும் நிக்கவில்லை மண்டைக்குள்ளும் நிக்கவேயில்லை.
எனக்கு தெரிந்தவரையில் இந்த வசனங்கள் யாவும் கரடு முரடானதாகவும் இனிமையற்றதாகவுமே இருக்கின்றது. இதற்கு காரணம் நான் சிறு வயது முதல் அந்த மொழியை முதன்முதலாக அறிந்து தெரிந்து கேள்விப்பட்ட விதம் மென்மையானதாக அன்றி வன்மையானதாகவும் கரடு முரடானதானதுமான வார்த்தை பிரயோகங்களாக கூட இருந்திருக்கலாம். இதற்கு உதாரணங்களாக பல சம்பவங்களை கூறலாம்.
ஓர் உதாரணம். அண்மையில் ஒரு சிங்கள தொலைக்காட்சியில் நாடகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நாடகத்தின் ஓர் கட்டத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காதல் காட்சி (Romance Scene) போய்க்கொண்டிருந்தது. இருவரும் ஏதோ இனிமையான விசயத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அவர்களுடைய முகபாவத்தை வைத்து அறிய முடிந்தது. ஆனால் அவர்கள் பேசுவதை கேட்கும் போது “ஏதோ சந்தையில் பொருட்கள் வாங்குவதற்தகாக பேரம்பேசி சண்டைப்படுவது போன்று” இருந்தது. நானும் கஷ்டப்பட்டு அதை அறிய பிரயத்தனப்பட்டேன். ம்ம்கூம் பயன் இல்லை.

அப்போதுதான் புரிந்து கொண்டேன்…..
பாரதியார் சும்மாவா சொன்னார்…
“யான் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி
போல் சிறந்தது வேறொன்றும் இல்லை.”

ஆனா நாம இப்ப கதைக்கிறது தமில் தான்.