Monday, March 29, 2010

Ravanan

இராவணன்

நாம் சிறு வயதிலிருந்து படிக்கும் பாடப்புத்தகம் தொடக்கம் பெரும் காவியங்கள்,இலக்கியங்கள் வரை எமது நாட்டை ஆட்சிபுரிந்த "எமது மன்னன் இலங்கை வேந்தன் இராவணண்" ஓர் கொடுங்கோலன் என்றுதான் குறிப்பிடப்பட்டிருப்பதை காண்கின்றோம். ஆனால் இதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது, அப்படி அந்நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பது உண்மையே என்று எடுத்துக்கொண்டால் அந்த உண்மைகளிலும் எவ்வளவு உண்மை இருக்கின்றது என ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும். ஆனால் அப்படி ஆராய்ச்சி செய்து பார்க்கிறமோ என கேட்டால் அதற்கு விடை தெரியாது என்பது மட்டுமே.
தமிழர்களாகிய நாம் கவலைப்படவேண்டிய விடயம் என்னவென்றால் பண்டைய காலத்திலோ அல்லது முற்காலத்திலோ நடந்த சம்பவங்கள்,வரலாறுகளை கல்வெட்டுக்கள் மூலமோ அல்லது சுவடிகள் மூலமோ அறிய முடியாமல் இருக்கிறது. ஏனென்றால் காலத்துக்கு காலம் எமது நாட்டிற்கு வந்த ஆட்சியாளர்களாலும் சரி இப்பொழுது இருக்கும் ஆட்சியாளர்காலும் சரி திட்டமிட்டு அந்த அடையாளங்கள் அழிக்கப்பட்டு வந்துள்ளன,அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே தான் நாம் எமது புராதன காலம் பற்றியும்,வரலாறு பற்றியும் மற்றவர்களுடைய(அயல்நாட்டின்) கருத்தை செவிசாய்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
நாம் தற்போது படிக்கும் கட்டுரைகள்,காவியங்கள் பொதுவாக அனைத்தும் இந்தியாவில் இருந்தே வந்துள்ளன அல்லது இந்தியாவில் இருந்து வெளிவந்த நூல்களை தழுவியே எழுதப்பட்டுள்ளன. எனவே நாம் அவர்களுடைய மனநிலையை உணரவேண்டும். அவர்கள் தமது நாட்டையும்,வரலாறுகளையும் உயர்வாகவே பார்ப்பார்கள்,உயர்வாகவே எழுதுவார்கள். குறிப்பாக சொல்லப்போனால் கம்பரால் எழுதப்பட்ட கம்பராமாயணத்தில் இருந்தே இவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்.
சரி இனி நாம் அவர்களுடைய இலக்கியத்தையே எடுத்துக்கொள்வோம். கம்பராமாயணத்தில் இலங்கையை ஆண்ட இராவணன் பெரும் கொடுங்கோலன் என்று குறிப்பிடப்படுகின்றது. ஆனால் இராவணன் தீவிர சிவன் பக்தர் என்றும் சாகாவரம் பெற்றவன் என்றும் அறிகின்றோம். ஆனால் இன்னொரு விடயமாக அவர்களுடைய காவியத்தில் இருந்து இராவணனின் தங்கை சூர்ப்பனகை காமக்கன்னிகை என்றும், அவள் இராமனை கவர முற்பட்டபோது இராமனால் மூக்கு அரியப்பட்டதாகவும் அறிகின்றோம். இதனால் தங்கையின் மூக்கு வெட்டப்பட்டதை ஒரு பொருட்டாக (சாட்டாக) வைத்து சீதையின் மீது ஆசை கொண்ட இராவணன் இந்தியாவில் இருந்து இலங்கையில் உள்ள அசோகவனத்திற்கு சீதையை கடத்தினான் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு இராவணன் ஓர் கொடுங்கோலன் என்று மக்களிடையே உணர்வை உண்டாக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும் சீதையை கடத்தி வந்த இராவணன் தகுந்த பாதுகாப்புடனேயே வைத்திருந்தான். குறிப்பாக சொல்லப்போனால் அவளுடைய கற்பு அழிக்கப்படவில்லை.
ஆனால் பெரும் படை பலத்தாலும் ஆயுத பலத்தினாலும் சூழ்ச்சியாலும் இராவணனை வீழ்த்திய இராமன் மீண்டும் சீதையை இந்தியாவிற்கு கொண்டு சென்றான்(அதுவே இன்றும் நடைபெறுகின்றது). அங்கு சீதையின் கற்பின் மீது சந்தேகம் கொண்ட இராமன் அவளை தீயில் இறக்கி கற்புடன் இருக்கின்றாளா என்ற தனது சந்தேகத்தை தீர்த்துக்கொண்டான். இதிலிருந்தே இராவணனின் மேன்மையும் இராமனின் கீழ்மையும் தெரிகின்றது. ஆனால் இச்சம்பவத்தை மாற்றி எழுதுவற்கு அவர்களுக்கு தகுந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
எனவே மாற்றன் கருத்தை விடுத்து எமது நாட்டை செல்வச்செழிப்புடன் ஆட்சிபுரிந்த எமது மன்னன் "மாவீரன் இலங்கை வேந்தன் இராவணணை" என்றும் நாம் போற்ற வேண்டும். தமிழர் பெருமையை என்றும் காப்போம். இது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

No comments:

Post a Comment